ஆரஞ்சு தோலில் இதய நோய்க்கான தீர்வு !
ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில் போட்டுவிடுகிறோம்.
ஒரு சிலர் அதில் குழம்பு செய்வது, காயவைத்துப் பொடி செய்து, சருமத்தில் பூசுவது என பயன்படுத்துவர்.
ஆனால், உலகம் முழுதும் பெரும்பாலும் இந்தத் தோல், கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், ஆரஞ்சுத் தோலில் இருந்து இதய நோய்க்கான மருந்தை எடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நம் குடலில் வாழும் சில பாக்டீரியா, நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் போது, டிரைமெதிலமைன் என் ஆக்சைட் எனும் வேதிப்பொருளை உருவாக்குகிறது.
இது இதய நோய்க்குக் காரணமாகிறது. நம் உடலில் இந்த வேதிப் பொருளின் அளவைக் கொண்டு இதய நோய் வரப்போவதை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஆரஞ்சுத் தோலில் உள்ள பெருலோயில்புட்ரெஸ்சைன் (Feruloylputrescine) எனும் ஒரு கலவை டிரைமெதிலமைன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஆய்வுகளை மேம்படுத்தி, ஆரஞ்சுத் தோலிலிருந்து பெருலோயில்புட்ரெஸ்சைனை பிரித்தெடுப்பதன் வாயிலாக, இதய நோய்க்கான புதிய மருந்தை உருவாக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.