ராமர் கோவிலில் குவியும் தென்கொரிய பக்தர்கள் !
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக வருகின்றனர். அயோத்தியை, தங்களுடைய தாய்வழி ஊராக இவர்கள் பார்க்கின்றனர்.
சில வரலாற்று ஆவணங்கள், தகவல்களின் படி, 2,000 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியைச் சேர்ந்த, 16 வயது இளவரசி சுரிரத்னா, கடல் பயணம் மூலம் கொரியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு, கொரிய அரசர் கிம் சுரோவை திருமணம் செய்தார். ராணியான சுரிரத்னாவுக்கு, ராணி ஹியோ ஹேவான்காக் என்று பெயரிடப்பட்டது.
இவர், 12 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரக் என்ற இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த, 60 லட்சம் பேர் தற்போது தென்கொரியாவில் உள்ளனர்.
கடந்த, 2015ல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜேயின் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள சுரிரத்னாவின் நினைவிடத்தை அழகுபடுத்தும் பணிகள் துவங்கின. கடந்த, 2018ல் இதை, தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்க்சோக் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கரக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும், அயோத்திக்கு வரும் நிலையில், தாய் வழி ஊரில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, ராமர் கோவிலை நேரில் பார்ப்பதற்காக, குழுக்களாக வரத் துவங்கியுள்ளனர் தென்கொரிய பக்தர்கள்.