கோடை விடுமுறையை குட்டீஸ்களுடன் கழியுங்கள் !

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய முதல் பள்ளிக் கூடம், வீடுதான். பெற்றோர்தான் அவர்களது முதன்மையான குரு. பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் கோடை விடுமுறை சிறந்தது.

ஏனெனில், விடுமுறை என்பதால் வீட்டில்தான் அவர்கள் நம்முடன் அதிக நேரம் உடனிருப்பர். நிறைய பொழுதுபோக்கு விஷயங்களை சொல்லித்தருவதற்கான வாய்ப்பு உருவாகும்.

செடி, மரக்கன்றுகளை வைக்கவும், வளர்க்கவும் கற்றுத்தரலாம். பூக்களை பற்றி விளக்கம் தரலாம்.

வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கும். பாடப்புத்தகம் அல்லாத பிற கதை, நகைச்சுவை, சுவாரசிய தகவல் புத்தகங்களை வாசிக்க பழக்கலாம்.

செல்லபிராணி வளர்ப்பை ஊக்குவிக்கும்போது, நாய், பூனைகளிடம் குழந்தைகளுக்கு உள்ள பயம் நீங்கும். வீட்டில் சின்ன சின்ன வேலைகள், சமையலில் உதவி, வீடுகளை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.

நேரம் கிடைக்கும் போது பாட்டு பாடவும், நடனமாடவும் சொல்லித்தாருங்கள். இது உற்சாகத்தை அதிகமாக்குவதுடன் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியாகவும் அமையும்.

எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளதோ, அதற்கான பயிற்சி முகாமில் சேர்த்து, பெற்றோர்களும் அங்கு சென்று நேரத்தை அவர்களுக்காக முடிந்தளவு செலவிடலாம்.