மேற்காசிய போரால் பலனடையும் உள்ளூர் சுற்றுலா துறை: கோடைக்கு சிம்லா, ஷில்லாங் செல்ல பயணியர் திட்டம்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த மாதம் 28ம் தேதி துவங்கிய போர் காரணமாக, மேற்காசிய வான்வழியில் விமான போக்குவரத்து முடங்கி உள்ளது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு மேற்காசிய வான்வழி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனால் நம் நாட்டில் உள்ள சுற்றுலா பயணியர் பலர், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு, உள்ளூரிலேயே சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் 65 சதவீத சுற்றுலா பயணியர், உள்ளூரிலேயே சிறந்த இடங்களை தேடி வருவதாக சுற்றுலா பதிவு தளமான, 'வாண்டர்ஆன்' தெரிவிக்கிறது.

லடாக், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா, குலு, மணாலி மற்றும் மேகாலயாவின் ஷில்லாங் என பிரபல மலைவாசஸ்தலங்களை நோக்கி நம் சுற்றுலா பயணியர் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

ஆன்மிக சுற்றுலாவுக்கும் மக்கள் அதிக அளவில் முக்கியத்துவம் தருவதாக தெரியவந்தள்ளது. குறிப்பாக ரிஷிகேஷ் செல்ல 23 சதவீதம் பேர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஏரிகளின் நகரமான உதய்பூருக்கு செல்ல, எப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 69 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக 47 சதவீதம் பேர் நீல நகரம் என அழைக்கப்படும், ஜோத்பூரை கண்டுகளிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் நம் அண்டை நாடுகளான வியட்நாம், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவையும் சுற்றுலா பயணியரின் விருப்ப பட்டியலில் உள்ளது.