பெண்களை பாதிக்கும் துாக்கமின்னை பிரச்னை... சில புரிதல்கள்...
துாக்கம் வருவதிலும், தொடர்ந்து துாங்குவதிலும் சிரமம், நள்ளிரவில் விழிப்பு வருவது, அதிகாலையிலேயே விழிப்பது, குறட்டை, பதற்றம், மனச்சோர்வு இருந்தால் துாக்கமின்னை பிரச்னை இருக்கலாம்.
பகல் நேரத்தில் துாக்கம், காலையில் எழும்போதே தலைவலி, போதிய அளவு துாங்கிய பிறகும் நீடிக்கும் சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவையும் துாக்கமின்மைக்கான அறிகுறிகள்.
மாதவிடாய் நின்ற பின் , சுவாசத்தைத் துாண்டுவதிலும், கொழுப்பு பரவலை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுகிறது.
இதனால், சுவாசப்பாதையின் மேல் பகுதி, துாக்கத்தில் குறுகிவிடும், 'மேல் சுவாசப்பாதை எதிர்ப்பு நோய் -யூ.ஏ.ஆர்.எஸ்., என்ற நுட்பமான சுவாசக் கோளாறு பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
வழக்கமான, 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் போலல்லாமல், இதில் சுவாசம் தடைபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.
ஆனால், சுவாசப் பாதையில் ஏற்படும் தடை காரணமாக, துாக்கத்தில் அவ்வப்போது விழிப்பு ஏற்படும்.
ஆழ்ந்த துாக்கம் இல்லாமல், சோர்வு, துாக்கமின்மை, மந்த நிலை, புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் பொதுவானதாக இருப்பதால், துாக்கமின்மையால் ஏற்படும் பிரச்னை என்பதே பல சமயங்களில் புரியாது.