உடல் ஆரோக்கியத்தில் மெக்னீசியத்தின் பங்கு
முக்கிய நுண்ணூட்டச்சத்தான மெக்னீசியம், தசை, நரம்பு, ஆற்றல் உற்பத்தி, எலும்பு பலம் உட்பட உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
நமது செல்கள், உறுப்புகள் மற்றும் மூளை சரியாக செயல்படுவதை, இது உறுதி செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனநிலை, தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. சுத்திகரிக்கப்படாத தானியங்கள், பருப்புகள் மற்றும் விதைகளிலும் இது நிறைந்துள்ளது.
இதுதவிர, சில மீன்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்களிலும் குறைந்தளவில் காணப்படுகிறது.
பிரேசில் முந்திரி, ஓட்ஸ் தவிடு, பழுப்பு அரிசி (நடுத்தர வகை), முந்திரி, கீரை மற்றும் பாதாம் போன்ற உணவுகளில் போதியளவில் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சியா விதைகளிலும், பூசணி விதைகளிலும் மெக்னீசியம் உள்ளது என ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, முழு தானியங்கள், பல்வேறு வகையான பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்தால், தினசரி தேவையான மெக்னீசியம் கிடைக்க வாய்ப்புள்ளது.