இருமல் மருந்துக்கு அடிமையாகும் இளைஞர்கள்!

இருமல் மருந்தில் 'ஆன்டி ஹிஸ்டமைன்' என்ற ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, துாக்க கலக்கத்தை தரும்.

மேலும் இதில் உள்ள டெக்ஸ்ட்ரோமெட்டோபின் என்ற இன்னொரு வேதிப்பொருள், துாக்கம், மயக்கம், கவனமின்மை, நினைவுத்திறன் குறைபாட்டை ஏற்படுத்தும்.

போதை தருவதால் இளம் வயதினர் பாட்டில் பாட்டிலாக வாங்கி குடிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் மதுவை போன்று இருமல் மருந்துக்கும் அடிமையாகி விடுவதாக கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 மி., குடிக்கலாம் என்றால், யாரும் அளந்து குடிப்பதில்லை. அப்படியே பாட்டிலோடு வாயில் ஊற்றுகின்றனர். தினசரி பழக்கத்தால் நாளடைவில் பக்க விளைவுகள் வர ஆரம்பிக்கும்.

ஒரே நாளில், ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் என்று குடித்தால் மூச்சு திணறல், மயக்கம் மற்றும் கோமா நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒவ்வொரு ஸ்பூன் இருமல் மருந்திலும், ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்திருக்கும். குடித்தவுடன் ரத்த சர்க்கரையின் அளவு உயரும். சிலருக்கு குமட்டல், செரிமானக் கோளாறு வரலாம்.

இதனால் தான், நம் நாட்டில் டாக்டர் பரிந்துரை இல்லாமல், எந்த இருமல் மருந்தையும் விற்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தேவையில்லாமல் அடிக்கடி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.