ஆன்லைன் கடன் பெறும்முன் கவனிக்க வேண்டியவை
தற்போது டிஜிட்டல் வசதி காரணமாக கடன் செயலிகள் மூலம் வங்கிகளுக்கு செல்லாமலேயே, ஒரு சில நொடிகளில் மொபைல் போனில் தனிநபர் கடனை எளிதாக பெற முடியும்.
பல அறியப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் செயலிகள் தற்போது உள்ளதால் சில ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மறைமுகக் கட்டணங்கள், கடன் வசூல் தொடர்பான பாதிப்புகளுக்கு கடன் வாங்குபவர்கள் ஆளாவதை தவிர்க்க டிஜிட்டல் கடன் செயலி மூலம் கடன் பெறும் முன் கவனிக்க வேண்டியவை இதோ...
தனிநபர் கடன் பெற விரும்பும் செயலி, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி நிறுவனம் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்தால் இயக்கப்படுகிறதா என சரிபார்ப்பது முக்கியமானது.
நம்பகமான கடன் வழங்கும் தளம், உரிய வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், கடன் திருப்பி செலுத்தும் காலம் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்களை தெளிவாகக் குறிப்பிடும்.
தனிப்பட்ட தொடர்புகள், புகைப்படங்கள். லொக்கேஷன் போன்ற தகவல்களை கோரும் செயலிகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லாவிட்டால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
ஏதாவதொரு கடன் செயலி மூலம் தனிநபர் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், முன்னணி ஆப் ஸ்டோர்கள் மற்றும் சோஷியல் மீடியாவில் குறிப்பிட்ட செயலி குறித்து மதிப்பாய்வு செய்யவும்.
நம்பகமான நிதி நிறுவனங்கள் எப்போதும் முறையான குறை தீர்க்கும் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்கக்கூடும்.
எனவே, உதவி எண், இமெயில் அல்லது தெளிவான அலுவலக முகவரி இல்லாத செயலிகளை கவனமாக பார்த்து, முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.