ஜூஸை விட நல்லது இதுதான்
ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறைய பழங்களைச் சாப்பிடுமாறு டாக்டர்கள் வலியுறுத்தினாலும், கடித்து சாப்பிட சோம்பல்பட்டுக் கொண்டோ, நேரமில்லை என்றோ, பலரும் ஜூஸ் குடிக்கின்றனர்.
இது சிறந்ததாக இருப்பினும், சில தீமைகளும் உள்ளன.
முதலாவதாகப் பழங்களை அப்படியே சாப்பிடும்போது நார்ச்சத்து கிடைக்கிறது. அடுத்ததாக ஜூஸ்களிலுள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த இரண்டும் ஏற்கனவே அறியப்பட்டவை தான். புதிதாக ஒரு பிரச்னை இருப்பதை அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
ஆய்வில் 18 - 35 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான நபர்களுக்கு 14 நாட்கள் தொடர்ந்து மற்ற உணவுகளுடன் ஜூஸ் தரப்பட்டது.
இதில், அவர்களின் வாயிலும், குடலிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, தீய பாக்டீரியாக்கள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜூஸிலுள்ள அதிகமான சர்க்கரையால், வாயிலுள்ள கிருமிகள் பெருகிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் கிருமிகளால் பல்வேறு உடல் நலக் கோளாறு ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஜூஸாக குடிப்பதை விட, பழங்களை உடைத்து கூழாக்கி, சதைப்பகுதியை வடிகட்டிவிடாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.