மூன்று மடங்கு சத்துள்ள தண்ணீர் பால்... இளம் தாய்மார்களுக்கான டிப்ஸ் !

தாய்ப்பால் போதவில்லை என்ற புகார் எல்லா அம்மாக்களும் சொல்வது தான். இந்த தவறான புரிதல், தாய்மார்கள் பலரிடமும் பரவலாக உள்ளது.

தாய்ப்பால் என்பது அமுதசுரபி. எந்த அளவிற்கு குழந்தைக்கு கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு பால் சுரந்து கொண்டே இருக்கும்.

'பால் போதவில்லை, என்னால் முடியுமா' என்ற தயக்கத்தில், புட்டிப் பால் கொடுக்க ஆரம்பித்தால் தான் பால் சுரப்பது குறையும். குழந்தை சப்பும் போது, பால் சுரப்பிகள் துாண்டப்படும்; தாய்ப்பால் சுரக்க துவங்கும்.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால், தண்ணீர் போன்று இருக்கும். இதைப் பார்த்து பால் சுரக்கவில்லை என நினைத்து, பிறந்தவுடன் பலரும் பால் பவுடர் அல்லது புட்டிப் பால் கொடுக்க துவங்குகின்றனர்.

தண்ணீர் போல சுரக்கும் முதல் பால், குழந்தையின் இயற்கையான தடுப்பூசி. வெள்ளையாக வரும் பாலை விட, இந்த தண்ணீர் பால் மூன்று மடங்கு அதிக சத்துள்ளது. இதை குழந்தைக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.

பகல் நேரத்தில் குழந்தை நான்கைந்து தடவை சிறுநீர் தாராளமாக போகிறது; மலம் கழிக்கிறது என்றால், போதுமான அளவு பால் கிடைக்கிறது என, புரிந்து கொள்ளலாம்.

அதிகபட்சம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்தே ஆக வேண்டும். முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். கஞ்சித் தண்ணீர், தண்ணீர் என, எதுவும் கொடுக்கக் கூடாது.

பசியை மட்டும் ஆற்றும் விஷயம் இல்லை தாய்ப்பால்; தாய் - சேய் பிணைப்பு அது. வெளியில் பார்க்கும் உலகம் முழுதும் குழந்தைக்கு புதிது.

எதை பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் குழந்தைக்கு பயம், பாதுகாப்பின்மை வரும். பரிச்சயமான ஒரே விஷயம், தாயின் உடல் சூடு. குழந்தையை அணைத்து பால் கொடுக்கும் போது தான், பாதுகாப்பு உணர்வு வரும்.