பரவத் துவங்கியது மெட்ராஸ் ஐ... டிப்ஸ் இதோ!!
விட்டு விட்டு மழை பெய்வதால், 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் வெண்படல அழற்சி வேகமாக பரவி வருகிறது. வெப்பம் குறைந்து குளிர் துவங்கும் பருவத்தில் வைரஸ் கிருமியின் பரவல் அதிகமாக இருக்கும்.
எல்லாவிதமான கண் சிவப்பும் மெட்ராஸ் ஐ என்று சொல்ல முடியாது. குளுக்கோமா போன்ற வேறு சில பாதிப்பிலும் ஆரம்ப நிலையில் கண்கள் சிவக்கலாம்.
கண்களின் வெண் படலத்தை பாதிக்கும் வைரஸ் தொற்று, சில நேரங்களில் பாக்டீரியா தொற்றாகவும் மாறலாம்.
வெளிச்சம் பார்த்தால் கண்களில் கூச்சம், மங்கலான பார்வை, பிசுபிசுப்பாக அடர்த்தியாக திரவம் வடிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கண் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கண்களில் வடியும் திரவத்தின் வாயிலாகவே ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக மெட்ராஸ் ஐ பரவுகிறது.
கண்கள் சிவந்தாலே மெட்ராஸ் ஐ எனநினைத்து நாமாகவே மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி பயன்படுத்துவது கூடாது. பாக்டீரியா தொற்றாக இருந்தால் மட்டும் ஆன்டிபயாடிக் மருந்து தரப்படுகிறது.
மருத்துவர் பரிந்துரைக்காத சொட்டு மருந்துகள் பலவற்றில் 'ஸ்டிராய்டு' கலந்துள்ளது. இது பல பக்க விளைவுகளை உருவாக்கலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்தை போடுவதற்கு முன்பும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வைரஸ் தொற்று பாதித்தவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது.