தீபாவளி ஸ்வீட்ஸை இன்னும் சுவையாக்க டிப்ஸ்!

எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால், இனிப்பு துாக்கலாக இருக்கும்.

கேசரி செய்யும் போது, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

போளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் ரெடி.

ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம்.

காராபூந்தியில் காரம் அதிகமானால், மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.

ரவா, மைதா, சர்க்கரையை சமமான அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால், வித்தியாசமான ரவை பணியாரம் தயார்.