மழைக்காலமும், மாடித்தோட்டப் பராமரிப்பும்!

மழை மண் வளத்திற்கும், மரம் செடி வளர்ச்சிக்கும் இயற்கையின் கொடை. இருந்தாலும் மழைக் காலத்தில் மாடித்தோட்டத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மழைக்காலத்தில் செடிகள் செழிப்புடன் வளர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

மழைக்காலத்தில் செடிகளின் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படி பூந்தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே வெளியேற்றிவிட வேண்டும்.

பிளாஸ்டிக் வாளியில் செடி வைத்தால், அதில் துளை இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம்.

தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை உடனே சீர்படுத்த வேண்டும்.

இந்த பருவத்தில் பூஞ்சை தாக்குதல்கள் அதிகம் என்பதால் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் போன்ற பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.

ஆடி மாதத்தில் காற்றும் பலமாக இருக்கும் என்பதால் மரக்கிளைகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்.

இந்த காலத்தில் கண்டிப்பாக செடிகளுக்கு கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது செடிகள் அழுகுவதற்கு வழிவகுக்கும்.

நிறைவாக இந்த பருவம் இறுதிவரை ஒவ்வொரு நாளும் செடியின் இலைகள், தண்டுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்ப்பது, அவற்றை அழுகாமல் பாதுகாக்கும்.