அளவுக்கு அதிகமான உப்பு உடலுக்கு ஆபத்து?

உடல் இயக்கத்துக்குத் தேவையான தாதுக்களில் ஒன்று சோடியம். இது நாம் சமையலில் சேர்க்கும் உப்பில் அதிகமாக உள்ளது. உடலின் பல முக்கிய செயல்பாடுகள் முறையாக நடைபெற உதவுகிறது.

குறிப்பாக மூளை நரம்புகள், தசைகளுக்கு மின் சிக்னல்களை சரியாக அனுப்பத் தேவையான எலெக்ட்ரோலைட்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ரத்தம் சீராக நாளங்களில் பாய்ந்து செல்ல உதவுகிறது.

உடல் இயக்கத்துக்கு 2,400 மில்லி கிராம் சோடியம் போதுமானது. இது ஒரு டீ ஸ்பூன் அளவு. ஆனால் பலரும் ஒரு டீ ஸ்பூனுக்கு மேல் உப்பு சாப்பிடுகிறோம். ஆனால் அளவுக்கதிகமான சோடியம் ஆபத்தை விளைவிக்கும்.

இது உடலுக்கு பல உபாதைகளை உண்டாக்கும். அடிக்கடி தண்ணீர் தாகம் உண்டாகும். அளவுக்கதிகமான உப்பு, கை, கால், முகத் தசைகளை வீக்கம் அடையச் செய்யும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

எதிர்காலத்தில் பக்கவாதம், இதய கோளாறுகள் ஏற்படலாம். அதிக சோடியம், சிறுநீரகங்கள் உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் செயலை பாதிக்கும்.

ரத்த நாளங்களில் அதிக தண்ணீர் தேங்குவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ள முதியோர்களுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

குழந்தை, வாலிப வயதில் உப்பு உடற்தசைகளால் நன்கு உறிஞ்சப்படும். 40 வயதுக்குமேல் அளவுக்கதிகமானால் உடல் பாதிப்பை உண்டாக்கும். எனவே உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சுவையில் கட்டுப்பாடு அவசியம்.