சுற்றுலா பயணியரை கவரும் மிர்ஜன் கோட்டை!!
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடா என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அழகான கடற்கரைகள், பிரமாண்ட சிவன் சிலை கோவில் தான்.
ஆனால் அங்கு ஒரு அழகான கோட்டையும் உள்ளது. கோகர்ணாவில் இருந்து, குமட்டா செல்லும் வழியில் அமைந்துள்ளது மிர்ஜன் கோட்டை.
விஜயநகர மன்னர்கள் வழிவந்த ராணி சென்னபைரவ் தேவியால் 16ம் நுாற்றாண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
லேட்டரைட் கற்களை பயன்படுத்தி நேர்த்தியாக கட்டப்பட்டு இருக்கிறது. நான்கு நுழைவுவாயில்களை கொண்டது.
கோட்டைக்குள் இருக்கும் சுரங்கப்பாதை, தெற்கு கோவா பகுதிகளை இணைக்கும் வகையில் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வழி மூடப்பட்டுவிட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இந்த கோட்டையை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தற்போது சுற்றுலா தலமாக உள்ளது.
காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கோட்டையை சுற்றிப் பார்க்கலாம். அனுமதி இலவசம்.
கோட்டை தவிர அருகில் உள்ள கும்டா, ஹொன்னாவர், கார்வார், முருடேஸ்வரா ஆகிய இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.
பெங்களூரில் இருந்து கோகர்ணா, குமட்டாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. ரயில் வசதியும் உள்ளது. விமானத்தில் சென்றால், மங்களூரு சென்று அங்கிருந்து வாடகை காரில் செல்லலாம்.