வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அழைக்கிறது... சீசன் துவங்கியாச்சு!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சென்னை-செங்கல்பட்டு ரோட்டில், கூட்டுரோடு பிரிவு வழியாக இங்கு செல்லலாம்.
இங்குள்ள ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர் பிடிப்பு கொண்டு ஏரி முழு கொள்ளளவு கொண்டுள்ளது.
பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் என பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வலசையாக வழக்கம் போல வந்துள்ளன.
வருகை தருவதன் நோக்கம் இங்குள்ள இதமான காலசூழ்நிலையில் தனது இணையுடன் தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புவதுதான். செப்., கடைசி வாரத்தில், பறவைகள் வலசை வர துவங்குகின்றன.
டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.மார்ச், ஏப்., மே மாதத்தின் தனது குஞ்சுகளுடன் திரும்பச் சென்றுவிடும்.
முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன. இன்றைய தேதிக்கு 30ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள், தங்கியுள்ளன.
வருபவர்களுக்கு அனுமதி கட்டணம் உண்டு, கேமராவிற்கு தனிக்கட்டணம். கையோடு பைனாகுலர் கொண்டு வந்தால் பறவைகளை நெருக்கத்தில் பார்த்து ரசிக்கலாம்.