சம்மரில் ஒன்ஸ்மோர் கேட்க தூண்டும்… மோர் வகைகள்!

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மோர் இருந்தால் போதும். வகை வகையாக செய்து தாகத்தை போக்கலாம்.

அவை, வெப்பத்தைத் தணிப்பதோடு, உடலில் நீரிழப்பை ஈடு செய்யும், மற்றும் ஆரோக்கியமானது. அவற்றை வித விதமாக தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

நீர்மோர்: தயிரை கடைந்து மோர் ஆக்கி நீர் விட்டு பெருக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது சீரக பொடி, கொத்தமல்லிதழை இதில் சேர்க்கவும். தேவையான உப்பு போட்டு குடிக்கலாம். வெப்பத்தை தணித்து இதமாக்கும்.

நெல்லி மோர்: நெல்லிக்காய்கள் இரண்டை விதை நீக்கி துண்டாக்கவும். அதனுடன் ஒரு கப் தயிர், இஞ்சி சாறு, மிளகுத்துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டினால் நெல்லி மோர் தயார். உடலுக்கு, சக்தி, ஆரோக்கியம் தரும்!

வெள்ளரி மோர்: வெள்ளரிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இத்துடன், பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை, தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். வெயில் உபாதை தணியும்.

வெல்ல மோர்: சிறிதளவு வெல்லப்பொடி, சுத்தம் செய்த இஞ்சி, சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி, புதினா இலை, தயிர், உப்பு, எலுமிச்சைசாறு, தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டவும். சுவை மிக்க வெல்ல மோர் தயார். அனைத்து வயதினரும் ரசித்து குடிப்பர்.

மாங்காய் இஞ்சி மோர் : மாங்காயைப் போன்று வாசனையும், லேசான இஞ்சி சுவையும் கொண்டதுமோரில் நறுக்கிப் போட்டு கறிவேப்பிலை, மல்லி, உப்பு சேர்த்து கலந்து குடிக்க காரசாரமாக இருக்கும். பித்தத்தால் ஏற்படும் கிறுகிறுப்பை போக்கும்.