கர்ப்ப காலத்திற்கு பிறகு பெண்களை பாதிக்கும் குடலிறக்கம்!

கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பையால், வயிற்று தசைகள், இணைப்பு திசுக்கள் விரிவடைகின்றன, இது பல வகையில் உடல் நலத்தை பாதிக்கிறது.

குறிப்பாக, கர்ப்பகால ஹார்மோன்களான ரிலாக்சின், ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றால், டயாஸ்டஸிஸ் ரெக்டி எனப்படும், வயிற்றுப் பகுதியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு தசைகள் பிரிகின்றன.

இத்துடன், பிரசவத்தின் போது ஏற்படும் அழுத்தத்தால் அடிவயிறு தசை பிரிதலும் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் இது இயல்பானது.

கர்ப்ப காலத்தில் தாயின் உடல் எடை அதிகரிப்பு, குழந்தையின் உடல் எடை, தாயின் வயது ஆகியவை தசை பிரிதலுக்கான காரணிகளாக கருதப்பட்டன. ஆனால், இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.

வயிற்றின் மையப் பகுதி அகலமாதல், மலக்குடல், வயிற்று தசையின் இடையே உள்ள இடைவெளியை அசாதாரணமாக விரிவடையச் செய்வது ரெக்டஸ் டயாஸ்டஸிஸ் எனப்படும்.

ஒரே பிரசவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெறுகிற பெண்கள் டயாஸ் டஸிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மல்லாந்து படுத்து, படுக்கை மட்டத்தில் இருந்து தலை, தோள்கள், கைகளை உயர்த்தி, விரல்களை அடி வயிற்றில் வைத்து அழுத்தும் போது, பிரச்னையின் தீவிரத்தை உணரலாம்.

வயிற்று தசைகள் விரி வடையும் போது, முக்கிய அறி குறிகளாக வயிற்றில் தளர்வு, வீக்கம் இருக்கும். கீழ் முதுகுவலி, வளைவது, மலச்சிக்கல், பலவீனமான இடுப்பு தசைகள் மற்ற அறிகுறிகள்.

கர்ப்ப காலத்தில், இப்பிரச்னைகள் மோசமடைய அனுமதிக்காமல் முறையான பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

குழந்தை பிறந்து 6 - 8 வாரங்களுக்குப் பிறகு, தொப்புள் குடலிறக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க இடுப்பு தசைகளை வலிமைப்படுத்தும் சிகிச்சை, பயிற்சி எடுக்க வேண்டும்.