முதுகு தண்டுவடத்தில் அழற்சி எதனால் ஏற்படுகிறது?
ஆட்டோ இம்மியூன் டிசார்டர் எனப்படும் நம் நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடல் செல்களையே அழிக்கும் செயலால் மயோசைடிஸ், ருமட்டாய்டு ஆர்ரைடிஸ் உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படுகிறது.
அதில் முதுகு தண்டுவடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் 'ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' பிரச்னையும் ஒன்று.
இது, முதுகு தண்டுவடத்தில் வலியை ஏற்படுத்துவதோடு, முதுகுத் தண்டை மூங்கில் போல விறைப்பாக்கி விடும்.
ஆன்கிலோசிங் ஸ்பாண்டி லைட்டிஸ் பொதுவாக 20 - -30 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கும். பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.
கீழ் முதுகு, பிட்டத்தில் ஏற்படும் வலி, இரவில் அதிகமாகவும், காலையில் எழுந்தபின் அதி தீவிரமாகவும் இருக்கும்.
கீழ் முதுகு விறைப்பு 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். நடமாட ஆரம்பித்ததும் வலியும், விறைப்புத் தன்மையும் குறையும்.
முதுகு நெகிழ்வுத்தன்மை குறைந்து விடுவதால், இப்பிரச்னை இருப்பவர்கள், முன் பக்கமாக குனிந்து சாக்ஸ், காலணிகளை அணிவதற்குக் கூட சிரமப்படுவர்.
எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ., ரத்தப் பரிசோதனையில் மூங்கில் முதுகுத் தண்டு பிரச்னை உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.
பாதிக்கப்பட்ட தண்டுவட மூட்டுகளுக்கு அதிகபட்ச இயக்கத்தை தந்து வலியைக் குறைப்பது தான் சிகிச்சை முறை. மேலும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதாவது வலி நிவாரணிகள் தரப்படும்.