பள்ளி குழந்தைகளிடம் பரவும் வைரஸ் காய்ச்சல்…பாதுகாக்க என்ன செய்யலாம்!

பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும்.

இதனால், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாட்கள் காய்ச்சல் தொடர்வதால் பலருக்கும் ரத்த பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

எந்த வகை வைரஸ், பாக்டீரியா தொற்றாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம்.

பள்ளி வளாகங்களை கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்தி வைத்திருத்தல் அவசியம். மேலும் வகுப்பறை, குறிப்பாக கழிப்பறையை சுகாதாரமாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் காய்ச்சிய நீரை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

தனிநபர் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. கை கழுவுதல், இருவேளை குளிப்பது, துவைத்த துணிகளை அணிவது அவசியம்.

வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க, அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றால், பாதிப்பின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும்.