காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?

காலாவதியான மருந்துகள் சில, நஞ்சாக மாறும். அவை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கும். திரவ மருந்துகளில், பாக்டீரியா வளரும். இதனால், புதிய நோய்கள் வரலாம்.

காலாவதியான மருந்துகளை அப்படியே குப்பையில் போடுவது சுற்றுச்சூழல், விலங்குகள், குழந்தைகள் மற்றும் சமூகம் என, அனைவரையும் பாதிக்கும் ஆபத்தான செயலாகும்.

துாய்மைப் பணியாளர்கள் அவற்றை எடுக்கும் போது அவர்கள் கைகளில் காலாவதியான மருந்துகள் பட்டு பாதிப்படைய வாய்ப்பு உண்டு.

அதோடு, மழையில் மாத்திரைகள் கரைந்து நிலத்தடி நீர் மாசுபடும். நீர்நிலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் பாதிப்படையும்.

சிலர் காலாவதியான மருந்துகளை, புதிய தேதி போட்டு கள்ளச் சந்தையில் விற்பதும் ஆங்காங்கு நடந்து வருகிறது.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த இரு முறைகள் உண்டு என கூறியுள்ளது.

முதலாவது முறை, காலாவதியான வலி நிவாரணி மருந்துகள், மாத்திரைகள், பாட்டிலில் உள்ள இருமல் மருந்துகளை கழிவறையில் ஊற்றி, 'ப்ளஷ்' செய்யுங்கள்.

இரண்டாவது முறை, எல்லா மருந்து, மாத்திரைகளையும் பிரித்து, பிளாஸ்டிக் பையில் போட்டு இறுக மூடி, அருகே உள்ள ஏதாவது மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியில் போடலாம்.

காலாவதியான மருந்துகள் வீட்டில் சேராமல் தவிர்க்க, தேவையான அளவு மட்டும் வாங்குங்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை மருந்து பெட்டியைச் சரி பாருங்கள்.