சிறுநீர் தொற்றால் அவதிப்படும் பெண் குழந்தைகளுக்கு தீர்வென்ன?

பள்ளி செல்லும் 3 - 8 வயதுக்குட்பட்ட, 30 - 50 சதவீத பெண் குழந்தைகளுக்கு, சிறுநீர் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண் குழந்தைகளின் சிறுநீர் குழாய் அளவு சிறியதாக இருப்பதால், நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவது, அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மலச்சிக்கல் ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகிறது.

இத்தொற்று ஒருமுறை வந்தவர்களுள், 50 % பேருக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பது அவசியமென, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், பொது கழிவறை பயன்படுத்த தயங்குகின்றனர். நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதால், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர் கழிப்பதை தவிர்க்க முறையாக தண்ணீர் குடிப்பதில்லை. மலச்சிக்கல் இருப்போருக்கும் இப்பாதிப்பு ஏற்படலாம்.

வெயில் காலம் துவங்கிவிட்டதால், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இளநீர், மோர், பழங்கள், தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் அதிகளவில் எடுக்க வேண்டும். உடல் சூடாக இருந்தாலும், சிறுநீர் பாதையில் வலி ஏற்படலாம்.

சிறுநீர் கழிக்குமிடத்தை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இத்தொற்று பாதிப்பை அலட்சியப்படுத்தினால், இளம்வயதிலே சிறுநீரகம் பாதிக்கலாம்.