குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
பள்ளி செல்லும் வயதிலுள்ள, 7 - 12 வயது குழந்தைகளில், 25 % பேருக்கு மேல், மலச்சிக்கல் பிரச்னை உள்ளது.
இதற்கு, உடல்ரீதியில் பல காரணங்கள் இருந்தாலும், மாவுச்சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ள துரித உணவுகளை சாப்பிடுவதே, பொதுவான காரணம்.
ஏழு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கும், இப்பிரச்னை அதிகரித்து உள்ளது.
குடல் அடைப்பு, ஆசனவாய் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், பெருங்குடலிலுள்ள நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற, பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளால், இப்பிரச்னை வரலாம்.
'மெட்டபாலிசம்' என்று சொல்லப்படும், உடல் உள் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களாலும், மலச்சிக்கல் பிரச்னை வரலாம்.
மிக கெட்டியான மலம், ஆசனவாய் வழியே வரும் போது, அந்த இடத்தில் புண் ஏற்படும். அடிக்கடி இது தொடர்ந்தால், வலிக்கு பயந்து, குழந்தைகள் மலம் கழிப்பதைத் தவிர்ப்பர்.
தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதாலும், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக இருந்தாலும், இப்பிரச்னை வரும்.
பிறவியிலேயே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை, அறுவை சிகிச்சை மூலமும், மற்ற பிரச்னைகளை, சரியான மருந்துகள் தருவதாலும் சரி செய்ய முடியும்.