தொண்டையில் புண் ஏன் ஏற்படுகிறது? உணவுக்குழாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாமா?

தொண்டையில் புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பொதுவாக டான்சில் பகுதியில் புண் வரும். அதிகமான சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உட்கொள்வது புண் வர காரணங்களாகும்.

நடுத்தர வயதினருக்கு வயிறு பிரச்னைகளால் தொண்டையில் புண் வரலாம். வயிற்றில் அதிகளவில் அமிலம் உற்பத்தியாகி இரவில் அது உணவுக்குழாய் வழி வந்து தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிக குறட்டை விடுபவர்கள், சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், துாக்கத்தில் வாய் வழி சுவாசிப்பவர்களுக்கு, வாய் சுத்தம் இல்லாமல் கிருமிகள் உருவானால் தொண்டையில் புண் வரும்.

உதட்டில், நாக்கில், தொண்டையில், உணவுக்குழாயில் புற்றுநோய் வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வாயை, குறிப்பாக பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

துரித உணவு சாப்பிடுபவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், அதிக மது அருந்துபவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு எளிதாக உணவுக்குழாய் புற்றுநோய் வருகிறது.

மது, புகையால் ஏற்படுவதை விட கலப்பட உணவுகளால் தான் புற்றுநோய் வருவது அதிகம்.

உணவில் சாதத்தை குறைத்து காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். பெண்களுக்கு குறிப்பாக பி 12 வைட்டமின் சத்து குறைபாடு காரணமாக உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிப்பதும் இதற்கு காரணம். புற்றுநோய் ஓரிடத்தில் ஆரம்பித்து பரவும். முதல் நிலையில் பிரச்னை ஆரம்பித்த உடனே கவனிக்க வேண்டும்.

தொண்டையில் சிறு புண் ஏற்பட்டாலும் அல்சர் தான் என நினைக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்.