வீட்டு சாப்பாடு சாப்பிட்டும் உடல் எடை குறையவில்லையா?

வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நிச்சயமாக நல்ல பழக்கம். ஆனால், வீட்டில் சமைக்கப்படும் உணவு என்பதாலேயே அது சமச்சீரான உணவு என்று சொல்லிவிட முடியாது.

வழக்கமான உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில், ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற துாண்டுதலால் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது.

சாப்பாடுகளுக்கு இடையிடையே பிஸ்கட், பிரெட், இனிப்புகள், இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், சிற்றுண்டிகளை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. இதை தவிர்க்கவும்.

உணவுத் தட்டில், வழக்கமாக சாப்பிடும் அரிசி சாதம், சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றின் அளவை பாதியாகக் குறைக்க வேண்டும்.

மேலும், காய்கறிகள், பழங்களின் அளவை வழக்கத்தை விட இரு மடங்காக அதிகரிப்பது, உடல் எடை குறைப்பில் நல்ல பலன் தரும்.

பருப்பு, பயறு வகைகள், முட்டை, மீன், கோழி இறைச்சி, தயிர், பனீர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவை வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட, சுத்திகரித்த உணவுகளை குழந்தை பருவத்திலேயே தவிர்த்து, சமச்சீரான உணவு பழக்கத்தை ஏற்படுத்தினால், 60 வயதிலும் அப்பழக்கம் தொடரும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், புரதத்தை மட்டும் கவனம் செலுத்தாமல், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் சமச்சீராக சாப்பிட வேண்டும்.