பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்…

தாய் , சகோதரி, மனைவி , மகள், தோழி என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள். இதனாலேயே ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என கூறுவதுண்டு.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர்.

இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.

1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர்.

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.

குடும்ப பந்தம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை, ஒற்றுமை, நலம் உள்ளிட்ட, சகலத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பெண்களை, போற்றுவோம், மதிப்போம், வணங்குவோம்.