காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்

முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர்.

சமூகத்தில் இவர் களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 29ல் ( ஒவ்வொரு கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது.

இளைஞர்களின் காது கேட்கும் திறன் சாதாரணமாக 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை உள்ளது. அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கிறது.

குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும்.

காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் குச்சியை பயன்படுத்துவது, எண்ணெய் ஊற்றுவது, கேட்கும் திறனை பாதிக்கும். அதை தவிர்க்கவும்.

பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.

தற்போது அறிவியல் வளர்ச்சியால் 'புரோகிராம்' செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இதனை பொருத்திக் கொள்ளலாம்.