காலம் கடந்தும் காவியம் பேசும் அஜந்தா குகைகள்...!
இந்திய பாரம்பரியத்தையும், வரலாற்றையும் நினைவுகூறும் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலுள்ள அஜந்தா குகைகள்.
அஜந்தா மலைச்சரிவுகளில் ஆங்காங்கே பாறைகளை குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட 30 குடைவரைக் கோவில்கள் அழகாக வீற்றிருக்கின்றன.
பார்ப்போரை வியப்பின் எல்லைக்கு அழைத்துச் செல்லும் வகையில், பிரமாண்ட தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் அழகிய சிலைகள், ஓவியங்கள் எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இங்குள்ள மிகப்பெரிய புத்தர் சிலை, நேராகப் பார்க்கும் போது புன்னகைப்பது போன்றும், பக்கவாட்டில் சோகமாகவும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது வியப்பான ஒன்றாகும்.
பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்த அஜந்தா குகைகள், 1819ல் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி வேட்டைக்கு சென்றபோது வெளியுலகினரின் பார்வைக்கு தெரிய வந்துள்ளது.
குடைவரைக் குகைகளில் புத்தரின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சிற்பங்களும், ஓவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
கி.மு., 2 முதல் கி.பி., 6 ஆம் நூற்றாண்டு வரை பலக்கட்டங்களாக சிற்பங்களும், ஓவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜந்தா குகைகளுக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த வகோரா நதியின் வெள்ளம், இயற்கை சீற்றங்களால் பல நூற்றாண்டுகளாக இவை புதர்களால் சூழப்பட்டு மறைந்து கிடந்துள்ளன.
பண்டைய இந்திய கலையை உலகுக்கு உணர்த்தும் இந்த அஜந்தா குகைகள், 1983ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பல நூற்றாண்டுகளை கடந்தும் வியக்க வைக்கும் பாரம்பரியத்தை, இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிவதிலேயே உணரலாம்.