நியூஸ் பேப்பரில் உணவு வைத்து வழங்க தடை
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்களும் உணவக உரிமையாளர்களும் பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பது இனி சட்டப்படி தவறு.
அதை மீறி நியூஸ் பேப்பரில் உணவு வைத்து வழங்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.
நியூஸ் பேப்பரில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் ரசாயனங்கள், சாயங்கள் மற்றும் ஈயம் உள்ளிட்ட பிற கன உலோகங்கள் உள்ளன.
மேலும் சூடான உணவை இதில் வைக்கும்போது, இந்த மை உருகி உணவோடு கலந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. இவை உடலுக்கு ஆபத்தானது.
மேலும் இவை அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்படும் போது பல்வேறு சுகாதாரமற்ற சூழலைக் கடந்து வருவதால், கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் உணவகங்கள், சாலையோர கடைகள் உட்பட அனைத்து உணவு விற்பனையாளர்களும் செய்தித்தாள்களில் மடித்து வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது பொதுமக்கள் புகாரளிக்கலாம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.