சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகள்
தூய்மையான மற்றும் சூழலியல் முக்கியத்துவம் கொண்ட கடற்கரைகளுக்கான சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் தான் நீலக்கொடி (Blue Flag Certified).
எந்த கடற்கரை, கடல் சூழலை அதன் அசல் தன்மையுடன் பாதுகாக்கப்படுகிறதோ அக்கடற்கரைக்கு, நீலக்கொடி சான்று வழங்கப்படும்.
தற்போது புதிதாக லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி மற்றும் கடமத்து கடற்கரைகள் ஆகிய நீலக்கொடி சான்று பெற்றதால், இந்தியாவின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் கோவளம், புதுச்சேரியின் ஈடன், குஜராத்தின் சிவராஜ்பூர், டையுவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள படுபித்ரி, கேரளாவின் காசர்கோடு மற்றும் காப்பாடு...
ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிஷாவின் கோல்டன், அந்தமான் நிகோபாரின் ராதாநகர் ஆகியவை இப்பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீலக்கொடி சான்று பெற்றுள்ள மினிகாய் துண்டி கடற்கரை, லட்சத்தீவில் உள்ள மிகவும் அழகிய கடற்கரைகளில் ஒன்று.
பளிங்கு போன்ற இந்த கடல் நீர் மென்மையாக அங்குள்ள வெள்ளை மணலை முத்தமிட்டுச் செல்லும். நீச்சல் வீரர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த கடற்கரை ஒரு சொர்க்கம்.
அதே போல் லட்சத்தீவில் உள்ள கடமத்து கடற்கரை தண்ணீர் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளிடையேயும் மிகவும் பிரபலமானது.
இங்கும் முத்துப் போன்ற வெள்ளை மணல், பளிங்கு போன்ற நீல நிற கடல், அதன் மிதமான காலநிலை மற்றும் நட்பான உள்ளூர் மக்கள் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கிறது.
இரண்டு கடற்கரைகளிலும் தூய்மை மற்றும் பராமரிப்பிற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடலில் குளிப்பவர்களை பாதுகாப்பதற்காகவும் ஆட்கள் இருப்பர்.