23 மாவட்டங்களில் 1,929 பேருக்கு புற்றுநோய்
தமிழகத்தில், 18 வயதுக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, வீடு மற்றும் அருகாமையில், புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், முதலில் துவக்கப்பட்டது. பின், 23 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
இதுவரை, 79.17 லட்சம் பேருக்கு, புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில், 1,929 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில், அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களில், 40 சதவீதம் புற்றுநோயால் ஏற்படுவதால், மாவட்ட வாரியாக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதில், புற்றுநோய் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருந்த, 1,929 பேர் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மார்பக புற்றுநோயால், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.