சர்காடியன் ரிதம்! கடிகாரம் காட்டும் ஆரோக்கியம்!
வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதை போல, நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அது தான் உயிரியல் கடிகாரம்.
தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு, 'சர்காடியன் ரிதம்' என்று பெயர்.
இதற்கு காரணமாக இருப்பவை பீரியட் ஜீன், டைம்லெஸ் ஜீன் ஆகிய இரு மரபணுக்கள்.
ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் பீரியட் ஜீன், ஒரு வகை புரதத்தை உற்பத்தி செய்யும். புரதத்தின் அளவு குறைய குறைய, இரண்டாவது ஜீனான டைம்லெஸ் ஜீன் சிதையும்.
இந்த சிதைவு தான், காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும்.
இதன் மூலம் தான் நமக்கு துாக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய இயக்கங்களும் சரிவர நடக்கின்றன.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில், சர்காடியன் ரிதத்தின் அடிப்படையில் புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
உயிரியல் கடிகாரத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது தான், வாழ்க்கை முறை மாற்றங்களால் வரும் நோய்களுக்கு காரணம், என்று சமீபத்திய ஆய்வு சொல்கிறது.
நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்.