கொளுத்தும் வெயிலில் முதியோர் செய்ய வேண்டியதும், கூடாததும்....
கோடையில் அதிக புற வெப்பத்தை முதியோர்களின் உடல் ஏற்க முடியாத நிலையில், மயக்கம், தலைசுற்றல் ஏற்படலாம்.
குறிப்பாக இதயம், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டோர், ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு இருப்போர் மற்றும் குறிப்பிட்ட வியாதிகளுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்து கொள்ளவும்.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மின்விசிறி அடியிலும், ஏசி., அறையில் இருப்போரும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தவறினால் வெப்பத்தால் மயக்கம் ஏற்படுவது, வயிறு, கை அல்லது கால்களில் தசைபிடிப்பு மற்றும் வலி ஏற்படுவது, அதிக வியர்வையினால், தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படலாம்.
மேலும் அரிப்பு ஏற்படுவது, தாகம், தலைசுற்றல், வாந்தி உணர்வு ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இறுதி நிலையாக, ஹீட் ஸ்ட்ரோக் எனும், வெப்ப வாதம் வரலாம். இது அவசர மருத்துவ நிலையாக கருதப்படுகிறது. இச்சூழலில் உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் இருக்கும்.
வேகமாக நாடி துடிப்பதுடன், தோலில் வியர்வை வராமல் வறண்டுவிடும்.
இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும் போது, உடனே நிழலான இடத்திற்கு செல்வது, குளிர்ந்த நீர் அருந்துவதும், மருத்துவ சிகிச்சை பெறுவதும் அவசியம்.
பொதுவாக, கோடைக்காலத்தில் காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
தண்ணீர், பழரசம், எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள் குடிப்பது, தளர்வான காட்டன் ஆடைகள் அணிவது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.