ஹோட்டல் ஸ்டைலில் பூரி உப்பலாக வரணுமா?
புஸு புஸு பூரின்னா யாருக்குதான் பிடிக்காது. பூரியை நன்றாக சாப்பிடத் தெரிந்த பலருக்கும் அதை எப்படி உப்பலாக செய்வது என்று தெரிவதில்லை.
எப்படித்தான் பார்த்து பார்த்து மாவு பிசைந்தாலும், பலருக்கும் பந்து போன்று உப்பலாக பூரி வருவதில்லை. அப்படியே உப்பலாக வந்தாலும் கூட, சில நொடிகளில் வடிந்து விடுகிறது.
சிலருக்கோ பூரி அதிகளவில் எண்ணெய் இருக்கிறது என்ற ஆதங்கம். எனவே, ஹோட்டல்களில் கிடைப்பது போன்று உப்பலாக பூரி தயாரிக்கும் வழிமுறை இதோ...
கோதுமை மாவு 2 டம்ளர், ரவை 1.5 டே.ஸ்பூன், தண்ணீர் 1 டம்ளர், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு , சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக, மிருதுவாக பிசையவும்.
கோதுமை மாவுடன் ரவையை சேர்த்து பிசையும்போது, பூரி உப்பலாக வருவதுடன், நீண்ட நேரம் நீடித்திருக்கும். எண்ணெய் சேர்ப்பதால், மிருதுத் தன்மையுடன் இருக்கும்.
பூரி நல்ல பிரவுன் கலரில் கேரமலைசாக வர சர்க்கரை உதவுகிறது. பிசையும் போதும் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சற்று இறுக்கமாகவே மாவு பிசைந்தால் பூரி அதிகம் எண்ணெய் இழுக்காது.
பிசைந்த மாவை 20 நிமிடத்துக்கு ஈரப்பதமான காட்டன் துணியால் மூடி ஊற வைக்கவும். பின், மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, சிறிது எண்ணெய் விட்டு மீண்டும் துணியால் மூடி வைக்கவும்.
இந்தமுறையில், எண்ணெயில் மாவு ஊற வைக்கப்படுவதால், பூரி மிருதுவாக இருக்கும். சிறிது நேரம் கழித்து உருண்டைகளை தட்டையாக தேய்த்து எடுக்கவும்.
சப்பாத்தி மாவு போன்று மெலிதாக தேய்த்தால் சரிவர பூரி உப்பிவராது. எனவே, மாவை தட்டையாக தேய்த்து, காயாமல் இருக்க ஈரப்பதமான வெள்ளைத்துணியால் மூடிவைக்கவும்.
தேய்த்த பூரி மாவை சூடான எண்ணெயில் போட்டு ஒரு சில நொடிகளில் சிறிது அழுத்தி விட்டால், பூரி நன்றாக உப்பி வரும். கரண்டியால் சிறிது எண்ணெயை பூரியின் மேல் பகுதியில் ஊற்றலாம்.
இப்போது ஹோட்டல்களில் கிடைப்பது போன்றே உப்பலான, சுவையான பூரி தயார். இதேபோல் ஒவ்வொன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலாவுடன் சாப்பிட சுவை அள்ளும்.