தொண்டை வலிக்கு இதம் தரும் இஞ்சி மிட்டாய்!
தேவையானப் பொருட்கள்: இஞ்சி, வெல்லப்பொடி மற்றும் சர்க்கரை - தலா 1 கப், உப்பு - 1 சிட்டிகை, தண்ணீர் - 2 டீஸ்பூன், நெய் - தட்டில் தடவ தேவையானளவு.
இஞ்சியை தோல் நீக்கி, நன்றாக கழுவி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் போடவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும்.
பின், அதே மிக்சி ஜாரில் சர்க்கரை, வெல்லப் பொடியை சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து, இஞ்சி, வெல்லம், சர்க்கரை பொடியை கலவையை போட்டு, மிதமான தணலில் வைத்து, கை விடாமல் கிளறவும்.
அந்த சூட்டில் சர்க்கரை, வெல்லம் கரைந்து நீராகும். அப்போது, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, கை விடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக துவங்கியதும், பவுலில் சிறிதளவு நீரை எடுத்து தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் உருண்டை போன்று இருந்தால், சரியான பதமாகும்.
உடனே அடுப்பை அணைத்து, அகலமான தட்டில் நெய் தடவி, அதில் கலவையை கொட்டி பரப்பவும். சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போதே, சதுர வடிவத்தில் வெட்டவும்.
நன்றாக ஆறினால் இப்போது இஞ்சி மிட்டாய் அல்லது இஞ்சி பர்பி ரெடி. அதை, காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெடாது.
தொண்டை வலி, இருமல் வரும்போது, இதை சுவைத்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.