குட்டீஸ்களுக்கு ஹெல்த்தியான கொண்டைக்கடலை, கேரட் பஜ்ஜி
காய்கறித் துருவலில் நான்கைந்து கேரட்டை, வட்டமாகவோ, நீளமாகவோ வில்லைகளாக சீவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விடாமல் ஒரு கைப்பிடி அளவு பச்சரியை நன்றாக வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் சோம்பு, குருமிளகு மற்றும் சீரகம் தலா 1/4 டீஸ்பூன், 7 வரமிளகாயை வறுக்கவும். தேவைக்கேற்ப காரம் சேர்க்க வேண்டுமென்பதால் வரமிளகாயை தனியே வறுக்க வேண்டும்.
முதல்நாள் இரவு ஊற வைத்த 200 கிராம் கொண்டைக்கடலையை சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
வறுத்த பச்சரிசி, சோம்பு, குருமிளகு மற்றும் சீரகத்தை தனியே தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். இதேப்போல் வரமிளகாயையும் தனியே அரைக்க வேண்டும்.
அரைத்த கொண்டைக்கடலை மற்றும் பச்சரிசி கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும். வரமிளகாய் பொடியை மட்டும் காரத்துக்கேற்ப சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவில் கேரட் சிலைஸ்களை இருபக்கமும் தோய்த்து போடவும். நன்றாக வெந்தவுடன் எடுத்தால், கேரட் மற்றும் கொண்டைக்கடலை பஜ்ஜி ரெடி.
வாசனையும், சுவையும் தூக்கலாக இருப்பதால் குட்டீஸ்கள் இதை உற்சாகமாக சாப்பிடுவர். அதேவேளையில், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.