அதிக ரத்த சர்க்கரை, இரும்பு சத்து குறைபாடாகவும் இருக்கலாம்!
மூன்று மாத ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்வதற்கான பரிசோதனை, 'ஹெச்.பி.ஏ1சி'.
ஆனால், இப்பரிசோதனை, எல்லா நேரமும் சரியான முடிவை தருவதில்லை என, சர்வதேச மருத்துவ இதழான, 'லான்செட்'டில் கடந்த பிப்ரவரியில் ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது.
கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 'அனீமியா' எனும் ரத்த சோகை காரணமாக, நீரிழிவு இல்லாதவர்களுக்கும் சராசரி ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாதை சேர்ந்த நரம்பியல் நிபுணர், 'ஹெச்.பி.ஏ1சி.,' பரிசோதனை, ரத்த சோகை, சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு மாறுபட்ட அளவை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ரத்த சோகை உள்ளவர்களுக்கு இரும்பு சத்து குறைபாட்டால், ரத்த சிவப்பணுக்கள், ஆரோக்கியமாக உள்ளவர்களை விட அதிக நாட்கள் ரத்தத்தில் தங்கி விடுகின்றன.
இதனால், அவை அதிக சர்க்கரை அளவை கிரகித்துக் கொள்வதால், ரத்த சர்க்கரை அளவை அதிகம் காட்டும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, சர்க்கரை பரிசோதனை செய்து கொள்பவர்கள், ரத்த சோகை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியமென, அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில், 45 வயதுக்கு மேல், ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளதாக, சமீபத்திய முடிவுகள் தெரிவிக்கின்றன.
சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால், ரத்த சோகை, அனைத்து வயதினரிடமும் பரவலாக உள்ளது.
அதிகப்படியான உடல் மற்றும் மன சோர்வு, மூச்சிரைத்தல், முடி கொட்டுதல், பசியின்மை உட்பட பல அறிகுறிகள் ரத்த சோகைக்கு உண்டு.
தினசரி உணவில் சர்க்கரை, கொழுப்பு உள்ளவற்றை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அடிப்படை ஊட்டச்சத்துகள் உணவில் இல்லாமல் போய் விடுகின்றன.
ஹெச்.பி.ஏ1சி., பரிசோதனை முடிவுகள் அதிக ரத்த சர்க்கரை அளவை காண்பித்தால், ரத்த சோகை உள்ளதா என கண்டறிய ஹீமோகுளோபின் அளவையும் பரிசோதிப்பது அவசியம்.