மரபணு நோய்கள் எவ்வாறு உருவாகின்றன? அனைவருக்கும் வரக்கூடியதா?

உடம்பில் ஒவ்வொரு செல்களிலும், 46 குரோமோசோம்கள் இருக்கும். 23 தந்தை வழியாகவும், 23 தாய் வழியாகவும் வந்திருக்கும்.

இந்த குரோமோசோம்களில் மரபணுக்கள் இருக்கும்; இதனை ஜீன்கள் எனக்கூறுவோம். இதில், ஏற்படும் மாற்றங்கள், குறைபாடுகளால் மரபணு நோய்கள் வருகின்றன.

மரபணு நோய் பிறப்பு முதலே ஒரு சிலருக்கும், சிலருக்கு வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ஒருவருக்கு இருந்தால், மற்றவருக்கு வரும் என கூறமுடியாது.

ஆனால் மரபணு குறைபாடு உள்ள தாய், தந்தைக்கு நோய்க்கான எவ்வித அறிகுறியும் இன்றி, அடுத்த தலைமுறைகளுக்கு சத்தமின்றி கடத்தப்படலாம்.

சொந்தத்தில் திருமணம் செய்யும் பலர், 'எங்கள் பெற்றோருக்கு எதுவும் வரவில்லை, எங்கள் குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது' என்று கூறுவார்கள்.

ஆனால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானலும் அடுத்தடுத்த பரம்பரைகளுக்கு இதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என டாக்டர்கள் கூறுகின்றனர்.

அதனாலேயே சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வேறு வழியில்லை என்பவர்கள் திருமணத்திற்கு முன், மரபணு மருத்துவர்களை சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு திட்டமிடும் முன் அவசியம் பரிசோதித்துக் கொள்ளவும். குறிப்பாக, முதல் குழந்தைக்கு பிரச்னை இருந்தால், அடுத்த குழந்தைக்கு திட்டமிடும் முன், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.