குழந்தைகள் பிறந்தவுடன் காது சரியாக கேட்கிறதா என கண்டுபிடிப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்வது பிறவியிலேயே ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

இது ஆயிரம் குழந்தைகளில் 1 முதல் 3 பேரைப் பாதிக்கிறது. ஆரம்பநிலையில் கண்டறியாவிட்டால் செவித்திறன் குறைபாட்டிலும் பேசுவதிலும் தாமதம் ஏற்படலாம்.

இதனைக் கண்டறிய இரண்டு முக்கிய பரிசோதனை முறைகள் உள்ளன.

ஒலியியல் உமிழ்வு (ஓ.ஏ.இ.,) பரிசோதனை மூலம் குழந்தையின் காதில் ஒரு சிறிய கருவியை வைத்து ஒலிகளை அனுப்பி உள்காதில் (சுருள் குழாய்) இருந்து வரும் எதிரொலிகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் எழுப்பப்படும் எதிரொலியின் மூலம் செவித்திறனின் செயல்பாட்டை கண்டறிய முடியும்.

அடுத்ததாக தானியங்கி செவித்திறன் மூளைத்தண்டு செயலாக்கம் (ஏ.ஏ.பி.ஆர்.,) பரிசோதனை.

இதில் குழந்தையின் தலையில் மின்முனைகள் பொருத்தப்பட்டு காதுக்குள் 'கிளிக்' என ஒலி அனுப்பப்படும்.

இதன் மூலம் மூளையின் செயல்பாட்டைப் பதிவு செய்து செவி நரம்பு, மூளைத்தண்டு பாதைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் கண்டறிய முடியும்.

குழந்தை பிறந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்வது சிறந்தது.

இதில் குறைபாடு கண்டறியப்பட்டால் 3 மாதங்களுக்குள் மீண்டும் ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும்.