இந்தியாவின் பிரம்மாண்ட அரண்மனை.... ஒரு ட்ரிப் போலாமா..?

குஜராத் மாநிலத்தில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனைதான் இந்தியாவின் பிரமாண்டமான அரண்மனை.

குஜராத்தின் புகழ்பெற்ற கலாசார மையமான வதோதராவின் மையப்பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 700 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 170 அறைகள் கொண்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் அரண்மனையின் முன்பு உள்ளது. இங்கே பொதுமக்கள் கோல்ஃப் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

1890 ல் மகாராஜா 3 -ம் சாயாஜிராவ் கெய்க்வாட் ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் கட்டிடக்கலை இந்தோ சாராசெனிக் கட்டடக்கலையின் கைவினைத்திறனைக் காட்டுகிறது.

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் இப்போது அருங்காட்சியகங்களாகவும், பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்காக விருந்து கூடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அரண்மனை உள்ளே நுழைந்ததும் தர்பார் ஹால் உள்ளது. அரச விழாக் கூட்டங்கள் மற்றும் கலாச்சார இரவு நிகழ்வுகள் கொண்டாடப்பட்ட இந்த பெரிய அரங்கம் தூண்கள் ஏதும் இடையே இல்லாமல் பிரம்மாண்டமாக நிற்கிறது.

அதைத் தாண்டி போனால் மகாராஜா பிரதாப் சிங், மகாராஜா ஃபதே சிங் மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோருக்கு முடிசூட்டிய கெய்க்வாட் குடும்பத்தினரின் முடிசூட்டு மண்டபம் உள்ளது.

இது அவர்களது புனிதமான இடம் என்பதால் காலணிகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்று பார்க்க வேண்டும். புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் இங்கே நிரம்பியுள்ளன.