குரங்கம்மை பாதிப்பு: வழிகாட்டுதல் வெளியீடு
ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி உள்ளது.
இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களை கையாள்வது குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை அறிகுறி இருப்பவர்களை மற்ற நோயாளிகள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
பெரியம்மை நோய் பாதித்தால் ஏற்படும் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தோலில் தடிப்புகள், உடல் குளிர்ச்சியடைதல் ஆகியவை இதற்கும் ஏற்படும்.
இந்த அறிகுறிகளுடன் உள்ள நோயாளியின் பெயர், வசிப்பிடம் உள்ளிட்ட விபரங்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்திற்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
குரங்கம்மை தொற்று அறிகுறியுடன் யாரேனும் வந்தால், அவர்களுடைய ரத்த மாதிரியை பரிசோதிமக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
அவசர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.