பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்

நாம் தினமும் அருந்தும் பாலிலுள்ள புரதத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய பிளாஸ்டிக் படலத்தை தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பாலின் முக்கிய புரதமான கால்சியம் கேசினேட், ஸ்டார்ச் மற்றும் பென்டோனைட் நேனோக்கிளே ஆகியவற்றை திரட்டிச் சேர்க்கும்போது உயிரியல் பாலிமர் கிடைக்கிறது.

உணவுப் பொட்டலங்களுக்குத் தேவையான வலிமையும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும் விதத்தில், பாலிலுள்ள பொருட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண பிளாஸ்டிக் பல நுாற்றாண்டுகள் அழியாமல் நிலத்தில் தங்கும். ஆனால், இவை மண்ணில் 13 வாரங்களிலேயே முழுமையாக மட்கிவிடும் என பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும், நச்சுக்களைக் கொண்டவை செயற்கைப் பாலிமர்கள்.

அவற்றுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க, பாதுகாப்பான மாற்றுகளைக் கண்டறிய, உலகமெங்கும் நடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

இந்த மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகள், சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதுடன், மனித ஆரோக்கியத்துக்கும், சூழலியலுக்கும் ஏற்படும் அபாயங்களையும் கணிசமாகக் குறைக்கின்றன.