ராஷ்மிகாவுக்கு பிடித்த கொடவா ஸ்டைல் புடவை.. எப்படி உடுத்துவது...?

ராஷ்மிகா மந்தனா.. ஓ சாமி.. பாடல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர். தெலுங்கு மட்டுமின்றி, கோலிவுட், பாலிவுட் என அனைத்து படங்களிலும் தடம் பதித்து வருகிறார்.

தற்போது தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். விதவிதமான பேஷன் உடைகளில் அவ்வப்போது ரசிகர்களை கிறங்கடிப்பார் இவர்.

இவரின் பூர்விகம், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம். அங்கு கூர்க் பகுதியின் பெண்கள் அணியும் பாரம்பரியமான கொடவா ஸ்டைல் புடவை ராஷ்மிகாவுக்கு பிடித்தமானது.

அவ்வப்போது திருமணம், முக்கிய விழாக்களில் கொடவா ஸ்டைல் புடவை அணிவது ராஷ்மிகாவின் பழக்கமாக உள்ளது. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே எளிதாக உணரலாம்.

சில மாதங்களுக்கு முன்பு குடகுவில் நடந்த தோழியின் திருமணத்தில், ராஷ்மிகா உட்பட தோழிகள் பலரும் குரூப்பாக கொடவா ஸ்டைலில் பாரம்பரியமாக புடவை அணிந்து மகிழ்ந்தனர்.

வழக்கமாக புடவை வலதுபக்கமாக சொருகி முன்பக்கமாக இழுத்துக் கட்டுவோம். ஆனால், கொடவா ஸ்டைலில் வலதுபக்கமாக சொருகி, பின்பக்கமாக இழுத்து ஒரு சுற்று சுற்றவும்.

பின், முந்தானைக்கு தேவையான அளவு புடவையை சரிபார்க்கவும். (முன்பக்கமாக தோல்பட்டையிலிருந்து 1 அல்லது 1 1/2 அடி முந்தானை நீண்டிருக்க வேண்டும்).

முந்தானைப் போக மீதமுள்ள பகுதியை எப்போதும் போல் மடிப்பு எடுக்கவும்; ஆனால், முதுகுப்பக்கம் பின் இடுப்பில் சொறுக வேண்டும்.

புடவையை முன்பக்கமாக திருப்பி, மார்பை ஒட்டியவாறு கைகளுக்கு கீழே பின்னோக்கி சுற்ற வேண்டும்; முன்புற வலது தோல் பட்டையில் பார்டருடன் சேர்த்து அழகாக 'பின்' செய்யவும்.

புடவையில் சுருக்கம் எதுவும் இல்லாதவாறு சிறு சிறு மடிப்புகளை கைகளால் நீவி அட்ஜஸ்ட் செய்தால் போதும். இப்போது நீங்களும் கொடவா ஸ்டைலில் உற்சாக நடைப்போடலாம்.