லலிதா மஹாலை சுற்றி பார்க்கலாமா!

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், லலிதா மஹால் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் முன்னர், லலிதா மஹால் அரண்மனையாக இருந்தது.

மைசூரு மன்னர் குடும்பத்தின், நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால், கடந்த, 1921ல் கட்டப்பட்டது. அந்த காலத்திலேயே, இந்த அரண்மனையை கட்ட, 13 லட்சம் ரூபாய் செலவு ஆனதாம்.

மும்பையை சேர்ந்த பிரபல கட்டட கலைஞர் பிரிட்சிலி வடிவமைக்க, முனிவெங்கடப்பா என்பரால் கட்டப்பட்டது.

இது, முற்றிலும் துாய வெள்ளை நிறத்தில், ஐரோப்பிய மறுமலர்ச்சி மற்றும் இத்தாலிய கட்டட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள பிரமாண்ட, பெல்ஜிய கண்ணாடிகள் தனி அழகு சேர்க்கின்றன.

கடந்த, 1974ம் ஆண்டு அரண்மனை சொகுசு ஹோட்டலாக மாறியது. இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்பட்டது. தற்போது கர்நாடக அரசின் சுற்றுலா துறையின் கீழ் வருகிறது.

ஹோட்டலில் மொத்தம், 54 சொகுசு அறைகள் உள்ளன. நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

அப்படி என்றால் சாதாரண மக்களால், இந்த பக்கமே செல்ல முடியாதா என்று நினைக்க வேண்டாம். ஹோட்டலை சுற்றி பார்க்க, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லலாம்.

நுழைவு சீட்டுடன் செல்வோருக்கு இலவச டீ, காபி வழங்கப்படுகிறது. ஹோட்டலின் தாழ்வாரங்கள், உணவகம், தோட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்லலாம். புகைப்படங்களும் எடுத்து மகிழலாம்.

ஹோட்டலில் தங்குவோர் அனைத்து அறை பகுதிகளுக்கும் சென்று பார்வையிடலாம்.