கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு: மாற்று மருந்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், ஜீரண மண்டல புற்றுநோய் பாதித்தவர்களுக்கு, ரத்த நாளங்கள் வழியே, 'கீமோதெரபி' சிகிச்சை வாயிலாக கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இந்த சிகிச்சையில், பிளாட்டினத்தை மூல சேர்மமாகக் கொண்ட, 'சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின், ஆக்சலிபிளாட்டின்' ஆகிய மருந்துகளில், ஏதேனும் ஒன்று இடம் பெறுகிறது.
இந்த வகை மருந்துகளும், அதன் மூலப் பொருள்களும், வெளிநாடு களில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்கா - ஈரான் போர் சூழலால், பிளாட்டினம் மீதான வரியும், விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இது தவிர ஹார்முஸ் நீரிணை வழியாக, மருந்து பொருட்கள் இறக்குமதியும் தடைபட்டுள்ளது.
இதனால், வழக்கமாக 500 ரூபாய்க்குள் விற்கப்படும், 'சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின், ஆக்சலிபிளாட்டின்' போன்ற மருந்துகளின் விலை, இந்தியாவில், 3-5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள், மாநில மருத்துவ பணிகள் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகின்றன .
ஆனால் போர் காரணமாக புற்றுநோயாளிகளுக்கு, 'கீமோதெரபி' சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு, தட்டுப்பாடு உள்ளது.
அதனால், நோயாளிகளின் தன்மைக்கு ஏற்ப மாற்று மருந்துகளை பயன்படுத்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.