நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும் !
குழந்தைகள் கண்ணாடி அணிய செல்போன் மட்டுமே காரணமென கூற முடியாது.
கிட்டப்பார்வை அதிகரிப்பதற்கு மரபியல் காரணங்களுடன் வாழ்க்கை முறை மாற்றங்களும் காரணம். பெற்றோருக்கு கிட்டப்பார்வை இருந்தால் குழந்தைக்கும் ஏற்படலாம்.
குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல், கம்ப்யூட்டர் பார்ப்பது, தொடர்ந்து அருகில் வைத்து படிப்பது போன்றவை, வெளிப்புற விளையாட்டு நேரம் குறைவதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தை வளரும் போது, கண் வளர்ச்சி அடைவதால், பவரிலும் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், கிட்டப்பார்வை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தொடர்ந்து நீண்ட நேரம் அருகில் வைத்து பார்க்காமல் இடைவெளி விட வேண்டும்.
புத்தகம் அல்லது திரையை கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கக்கூடாது. இவற்றை தவிர்க்க ஒரு நிமிடத்திற்கு 16 முறை கண் சிமிட்ட வேண்டும்.
இது குறையும் போது, கண்களின் மேற்பரப்பில் உள்ள கண்ணீர்ப்படலம் வேகமாக ஆவியாகி கண் வறட்சி, எரிச்சல், மணல் விழுந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஏசி.,யின் கீழ் அமர்வதாலும், ஃபேன் முன் நீண்ட நேரம் அமர்வதாலும், கண்களில் ஈரப்பதம் ஆவியாவது அதிகரிக்கலாம்.
கண் பயிற்சி அல்லது உணவு மூலம் மீண்டும் பார்வை திறனை அதிகரிக்கலாமென, சமூக வலைதளங்களில் பல தவறான தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே ஏற்பட்ட பார்வை பாதிப்பை முழுமையாக சரி செய்ய முடியும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.
சத்தான உணவு கண் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால், அது ஏற்கனவே ஏற்பட்ட பார்வை பாதிப்பில் இருந்து முற்றிலும் மீட்டு தரும் எனக் கூற முடியாது.