வேளா வேளைக்கு சாப்பிடலாமா... தாமதமாக சாப்பிடலாமா?
நகரங்களில் வசிப்பவர்கள் தொடர்ச்சியாக பல மணி நேரம் வேலை செய்கின்றனர்; வேலை நிமித்தமாக இவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை.
ஒரு வேளை உணவிற்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையில், பல மணி நேர இடைவெளி விட்டு சாப்பிடுவதை பழக்கமாக்கிவுள்ளனர்.
இது,'மெட்டபாலிசம்' எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சிதைக்கும்; உடல் எடை, ஆற்றல், ஹார்மோன்கள் செயல்பாடு, ஆகியவற்றை பாதிக்கும்.
சாப்பிட்ட உணவில் இருந்து பெறப்பட்ட கலோரி, உடலின் வளர்சிதை மாற்றத்தின் போது, எரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மெட்டபாலிசம் இதை தன்னிச்சையாக செய்ய முடியாது.
சாப்பிட்ட உணவை எந்த நேரத்தில் எரிக்க வேண்டும், எந்த சமயத்தில் சக்தியாக சேமிக்க வேண்டும் என்பதை, 'இன்சுலின், கார்டிசோல், கிரெலின்' போன்ற ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.
பல மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் குறைந்து, கலோரியை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்ற பாதுகாப்பான நிலைக்கு உடல் சென்று விடும்.
இதனால், இயல்பாக எவ்வளவு கொழுப்பு சேமிக்கப்படுமோ, அதை விட அதிக கொழுப்பு, வயிற்று பகுதியில் சேமிக்கப்படும்.
நகர்ப்புறங்களில் பலரும் காலை உணவை தவிர்த்து, மாலையில் அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இத்துடன், உடல் உழைப்பு இல்லாததும் சேர்ந்து, சீரற்ற வளர்சிதை மாற்ற நோய்களான, உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேருவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உணவுகளுக்கு இடையில் அதிக இடைவெளி விடும்போது, ரத்த சர்க்கரை அளவு குறைந்து, மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது.
இதனால், எதிர்பாராத பசி உணர்வு அதிகரித்து, தேவைக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இத்துடன், இன்சுலினை சரியான முறையில் பயன்படுத்தும் திறன் குறைந்து, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடலின் ஆற்றல் குறையும், எரிச்சல், தலைவலி, நீர்ச்சத்து குறைவு ஆகியவை ஏற்படும். சரியான வேளைக்கு சாப்பிடுவதே மிகவும் நல்லது.