உடல் வெப்பத்தை அதிகரிக்கும் காரம்

உடல் தன்னைத் தானே குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது சோர்வு, தலைசுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

அப்போது, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வெப்பத்தால் ஏற்படும் சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்ற அபாயமும் உள்ளது.

வெயில் கொளுத்தும் நாட்களில் பகல் நேரத்தில் முடிந்தளவு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.

வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலான பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம். காபி, டீயைத் தவிர்த்து, அதிகளவில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் வறட்சி ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிடும்போது, வறட்சி இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணி, திராட்சை, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் அதிகமுள்ளன; செரிமானத்தை மேம்படுத்தும்.

வறுத்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமுள்ளதால், ஜீரணிப்பது சிரமம்; உடல் மந்தமாகவும், சோர்வாகவும் இருக்கும்.

காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையை உண்டாக்கும்; உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.

தாகம் எடுக்காவிட்டாலும், நாள் முழுதும் தண்ணீர் குடிப்பது அவசியம். சோடா போன்ற சர்க்கரை அதிகமுள்ள பானங்களை தவிர்க்கவும்.