தினம் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவரா? - ரூ.1 கோடியை சாம்பலாக்குகிறீர்கள்!
புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கடுமையான கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சிகரெட் நமது நிதி நிலைமையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சின்ன கணக்கின் மூலம் பார்க்கலாம்.
30 வயதில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறீர்கள் எனில், அதன் விலை ரூ.170. மாதம் ரூ.5,100 ஆகிறது.
சிகரெட் பிடிக்காத ஒரு நபர் இதே 5,100 ரூபாயை ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு
வட்டி எதிர்பார்க்கக் கூடிய மியூட்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி., திட்டங்களில்
போட்டு வந்தால்...
அடுத்த 30 ஆண்டுகள் முடிவில் அவரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் இருக்கும். அது தான் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அதிசயம்.
முதலீடு செய்தது ரூ.18.3 லட்சம் தான். ஆனால் அது தந்த ரிட்டர்ன் ரூ.87.7 லட்சமாக இருக்கும். சிகரெட் விலை உயர்வை கணக்கிடும் போது மேலும் சில லட்சங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திருக்கும்.
சரி... சிகரெட்டை முற்றிலுமாக விடுவதற்கு கடினமாக இருக்கிறது. பாதியாக குறைத்துக்கொள்கிறேன் என்கிறீர்களா. அப்படி பார்த்தால் மாதம் ரூ.2,550 மிச்சமாகும்.
அதனை அப்படியே 30 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் முதலீடு செய்து வந்தால், அது 10% ரிட்டர்ன் வழங்கினால். உங்களிடம் ரூ.53 லட்சம் இருக்கும். முதலீடு செய்த தொகை ரூ.9.8 லட்சம் தான்.
எனவே, சிகரெட்டை நிறுத்திவிட்டால் உங்களைப் போன்ற சிறப்பான நபர் யாரும் இல்லை. ஆரோக்கியமான, ஆடம்பரமான எதிர்காலத்துக்கு இதனை முயற்சித்துப் பாருங்களேன்.
சொல்வதற்கு எளிது தான். ஆனால், கடைப்பிடிப்பது என்பது போருக்கு தயாராவதைப் போன்றது. சிகரெட் பிடிக்காமல் மிச்சமாகும் பணத்தை இன்றே, இப்பொழுதே முதலீடு செய்யத் துவங்குங்கள்.