ஆண் குழந்தைகளை பாதிக்கும் திக்குவாய்
குழந்தைகள் பேசும் போது கோர்வையாக பேச திணறுவதை திக்குவாய் அல்லது பேச்சு திணறல் என்கிறோம்.
குழந்தை வளர வளர, பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் போது, தானாகவே சரியாகிவிடும். இதை, 'டெவலெப்மென்டல் டிஸ்ப்ளுயன்சி' என்பர்.
பொதுவாக இரண்டு, மூன்று வயது குழந்தைகளிடையே இது காணப்படும். பெண்களை விட, ஆண் குழந்தைகளிடம் 4 மடங்கு அதிகம் காணப்படுகிறது.
பெற்றோருக்கு பேச்சு திணறல் இருந்தால், குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வர 3 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
இதன் அறிகுறிகள்... குழந்தைக்கு குழந்தை மாறுபடும். ஒரு வார்த்தையின் முதல் ஒலியை திரும்பத் திரும்பச் சொல்வது, வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்வது...
வார்த்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி, ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்துதல், பேசும்போது கண் இமைகளை சிமிட்டுதல்...
முகத்தசைகள் சுருக்குதல் அல்லது பெருமூச்சு விடுதல், குழந்தையின் மனநிலை பாதிப்புகள், மன அழுத்தம் மற்றும் இறுக்கமான சூழல்கள், பேச்சு திணறலை அதிகப்படுத்தலாம்.
திக்குதல் அதிகமாகும் போது, குழந்தை அதை உணர ஆரம்பித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
இதனால் மற்றவர்கள் முன்பாக பேசுவதை தவிர்ப்பது, விரக்தி மனநிலை மற்றும் மன ஊக்கம் குறைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
சக குழந்தைகளின் கிண்டலுக்கு ஆளாகி, பள்ளி செல்வதை வெறுப்பர். இதில் கவனிக்க வேண்டியது, பாடும் போதும், செல்லப் பிராணிகளுடன் பேசும் போதும் திக்குவதில்லை.
பேச்சுத்திணறல் உடைய குழந்தைகள் பொதுவாக நல்ல அறிவுத்திறனோடு இருப்பர். எனினும், ஐந்து வயதிற்கு மேல் திக்கினால் மருத்துவ ஆலோசனை தேவை.
ஆட்டிசம், கற்றல் குறைபாடு, இயல்புக்கு மாறான அதீத சுறுசுறுப்பு, செவித்திறன் குறைபாடு போன்றவற்றுடன் திக்குவாய் பிரச்னையும் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம்.